புத்தாண்டு - Deen or Dunia

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, December 16, 2015

புத்தாண்டு

Post image for புத்தாண்டு

இஸ்லாமிய புத்தாண்டு பிறந்து விட்டது. பொதுவாக உலக மக்களின் வழக்கில் பல வகையான வருடப்பிறப்புகள் காணப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை ஒர் இறைத்தூதரின் அல்லது மகானின் பிறப்பையோ அல்லது இறப்பையோ அடிப்படையாக வைத்தே கணக்கிடப்படும். ஆனால் அந்த வழக்கத்திற்கு மாறாக இஸ்லாமிய புத்தாண்டு கணக்கிடப்பட்டு வருகிறது. அல்லாஹ்(ஜல்) தனது இறுதித்தூதராக முஹம்மது(ஸல்) அவர்களை அவர்களது 40வது வயதில் தேர்ந்தெடுத்தான். அவர்களது 40வது வயதிலிருந்து 63வது வயதுவரை அல்லாஹ் தன்புறத்திலிருந்து வஹீ இறக்கி சிறிது சிறிதாக அல்குர்ஆன் வசனங்களை அருளி அதை நிறைவு செய்தான்.

அதுவே உலகம் அழியும்வரை உலக மக்கள் அனைவருக்கும் இறுதிவேதம் என்று பிரகடனப்படுத்தினான். எவற்றை இப்றாஹீம்(அலை) அவர்களுக்கு இறக்கி கட்டளையிட்டானோ அதாவது நானே உங்களைப் படைத்த இறைவன் எனக்கு யாரையும் இணையாக்காதீர்கள் என்னை மட்டுமே வணங்கி வழிபடுங்கள். என்னிடமே உங்களுடைய தேவைகள் அனைத்தையும் கேளுங்கள் என்ற அதே போதனையைத்தான் வஹீயாக அறிவித்தான். ஆனால் அல்லாஹ்வின் மார்க்கத்தை மதமாக்கி வயிறு வளர்க்கும் புரோகிதரர்கள் வழமைப்போல் என்ன செய்தார்கள் தெரியுமா?

இப்றாஹீம்(அலை), இஸ்மாயில்(அலை) இருவரும் செய்த போதனைக்கு நேர்முரணாக அவர்களையும் இன்னும் பல நல்லடியாளர்களையும் சிலைகளாக வடித்து அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டிய கஃபத்துல்லாஹ்வில் சிலை வணக்கத்தை ஏற்படுத்திவிட்டார்கள். சிலை வணக்கம்தான் அசலான வணக்க வழிபாடு என்றிருந்த அன்றைய அரபு மக்களுக்கு முஹம்மது நபி(ஸல்) போதித்த ‘ஒரே இறைவனை மட்டுமே வணங்கவேண்டும் அதுவே வெற்றியைத்தரும் என்ற போதனை அவர்களுக்கு அளவு கடந்த வெறுப்பை ஏற்படுத்தியது. தங்களின் மூதாதையர்களின் வணக்க வழிபாட்டை கேவலப்படுத்துகிறார், இழிவு படுத்துகிறார் என்று ஆத்திரத்திற்குமேல் ஆத்திரம் கொண்டனர்.

ஒரே இறைவனை மட்டுமே வணங்கவேண்டும் என்ற அசலான போதனையை வேரோடு வேரடி மண்ணோடு ஒழித்துக்கட்ட வேண்டும் என்று கங்கணம் கட்டினார்கள். அதற்குறிய ஒரே வழி இந்தப்போதனை செய்யும் முஹம்மது(ஸல்) அவர்களை கொலை செய்து விடுவதே சரியான தீர்வாகும் என்று, அன்று கஃபதுல்லாஹ்வை தங்களின் ஆதிக்கத்தில் வைத்திருந்தவர்கள் முடிவுக்கு வந்தனர். அதற்குறிய எல்லா ஏற்பாடுகளையும் கச்சிதமாகச் செய்து முடித்து விட்டனர். அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தனது இறுதித் தூதரை அந்த கொலை முயற்ச்சியிலிருந்து காப்பாற்றி அவர்களைக் கொண்டு தனது மார்க்கத்தையும் இறுதி வேதத்தையும் நிறைவு செய்ய நாடிவிட்டான்.

எனவே தனது இறுதி தூதருக்கு தான் பிறந்து வளர்ந்த மண்ணான மக்காவை விட்டு மதினாவுக்கு வெளியேறிச் செல்ல உத்தரவு பிறப்பித்தான். அதுமட்டுமல்ல அந்த குரைஷிகளின் கொலை வெறித்தாக்குதலிலிருந்து தனது தூதரை அதி அற்புதமாக காப்பாற்றி மதீனா சென்றடயச் செய்தான். அந்த அற்புத நிகழ்ச்சியே “ஹிஜ்ரத்” என்று சரித்திரத்தில் பதியப்பட்டுள்ளது. அந்த நிகழ்சியை அடிப்படையாக வைத்தே ஹிஜ்ரி ஆண்டு கணக்கிடப்பட்டு வறுகிறது. ஒவ்வொரு ஆண்டின் துவக்கமும் நமக்கு அந்த மகத்தான நிகழ்ச்சியை நினைவு படுத்துவதாக அமைந்துள்ளது.

ஹிஜ்ரி ஆண்டின் முதல் மாதம் முஹர்ரம். இந்த முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாள் ஆஷுரா என்று அழைக்கப்படுகிறது. இந்த நாள் நபி(ஸல்) அவர்களது காலத்திற்கு முன்பிலிருந்தே சிறப்புக்குறிய நாளாக இருக்கிறது. அன்றுதான் மூஸா(அலை) அவர்களும் அவர்களது சமூகமும் பிர்அவ்னின் கொடுமைகளிலிருந்து மீட்சி பெற்ற நாளாகும். பிர்அவ்னும் அவனது படைகளும் செங்கடலில் மூழ்கடிக்கப்பட்ட நாளாகும். எனவே மூஸா(அலை) அவர்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு அன்றைய தினம் நோன்பு நோற்றார்கள். அதை வைத்து யூதர்களும் அந்த நாளில் நோன்பு நோற்றார்கள். இதை அறிந்த நபி(ஸல்) அவர்கள் மூஸா(அலை) அவர்களை பின்பற்றுவதற்கு நாங்களே உரிமை உள்ளவர்கள் என்று கூறி தாமும் அந்த நாளில் நோன்பு நோற்றதுடன் முஸ்லிம்களையும் நோன்பு நோற்க ஏவினர்(புகாரி) ரமழான் நோன்பு கடமையாகும் வரை முஸ்லிம்கள் ஆஷுரா நோன்பை அக்கரையுடன் நோன்பு நோற்று வந்தனர்.

ரமழான் நோன்பு கடமையான பின் விரும்பியவர் ஆஷுரா நோன்பு நோற்கும் நிலை இருந்து வந்தது. நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்கு முந்திய வருடம் ஆஷுரா தினத்தில் யூதர்களுக்கு மாறு செய்யும் நோக்கத்துடன் அடுத்த வருடம் நான் உயிரோடு இருந்தால் முஹர்ரம் 9லும் 10லும் நோன்பு நோற்பேன் என்றார்கள். (முஸ்லிம்)

ஆனால் அடுத்த ஆஷுரா தினம் வருவதற்கு முன் அல்லாஹ்வின் நாட்டப்படி அல்லாஹ் அளவில் சேர்ந்து விட்டார்கள். எனவே முஸ்லிம்கள் இப்போது முஹர்ரம் 9 லும் 10 லும் நோன்பு நோற்பது நபிவழியாகும். அடுத்து நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு ஹுசைன்(ரழி) அவர்கள் சஹீதாக்கப்பட்டது ஹிஜ்ரி 61 இதே முஹர்ரம் 10 நாள் ஆஷுரா தினமாகும். ஆனால் இதைக் காரணம் காட்டி முஸ்லிம்கள் முஹர்ரம் 1 லிருந்து 10 வரை சில சடங்கு சம்பிரதாயங்களைச் செய்வதற்கும் மார்க்கத்திற்கும் சிறிதும் சம்பந்தமில்லை. இந்த முஹர்ரம் 1 லிருந்து 10 வரை கடைபிடிக்கும் அனாச்சாரங்கள் ஷியாக்களும் செய்து வரும் அனாச்சாரங்களேயாகும்.

உண்மையில் ஒவ்வொரு ஹிஜ்ரி ஆண்டும் எவ்வளவு பெரிய மகத்தானதொரு தியாகத்தினை நமக்கு நினைவூட்டுகிறது. சத்தியத்தை மக்கள் மத்தியில் எடுத்து வைக்கும்போது எத்தனை துன்பங்களை சந்திக்க நேரிட்டாலும் அதற்காக சத்திய பிரச்சாரத்தை துறக்கக்கூடாது; அதுவே இறுதி வெற்றியை ஈட்டித்தரும் என்ற படிப்பினையை முஸ்லிம்கள் இந்த ஹிஜ்ரி ஆண்டின் துவக்கத்தில் பெறுவோமாக.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages