முஸ்லிம்+ஒற்றுமை = இஸ்லாம் - Deen or Dunia

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, December 16, 2015

முஸ்லிம்+ஒற்றுமை = இஸ்லாம்

 

Post image for முஸ்லிம்+ஒற்றுமை = இஸ்லாம்


அல்லாஹ் வழங்கிய இஸ்லாம் மார்க்கமானது, முஸ்லிம்களின் சகோதரத்துவம் என்ற ஒற்றுமையில் உருவான ஒரு ஒப்பற்ற வாழ்க்கை நெறி. ஆனால் இன்றைய முஸ்லிம்கள் இதன் ஒழுக்க மாண்புகளை சிதைத்து சின்னாபின்னமாக்கி தனித்தனி கூட்டங்களாக இயக்கங்களாக பிரிந்து நிற்கின்றனர். இதில் கை சேதம் என்னவென்றால், ஒவ்வொருவரும் தாங்கள்தான் நேர் வழியில் இருப்பதாக பெருமிதம் கொள்கிறார்கள்.

அன்றைய அரபு மக்கள் பல குலங்களாக,கோத்திரங்களாக பிரிந்து நின்று ஆண்டாண்டு காலமாக தங்களுக்குள் சண்டையிட்டு மனித உருவில் மிருகங்களாக நடமாடினார். இவர்கள் நரகின் விளிம்பில் இருந்ததாக அல்லாஹ் கூறுகிறான். இம்மக்கள் முஸ்லிமாகி குர்ஆன் கூறும் ஒற்றுமை கயிற்றை பற்றிப் பிடித்தவுடன் சகோதரத்துவம் பிறந்தது சண்டை சச்சரவு ஒழிந்தது. இஸ்லாம் மலர்ந்தது. அல்லாஹ் கூறுகிறான்,

“ இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்; அல்லாஹ் உங்களுக்கு கொடுத்த அருட்கொடைகளை நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள்- உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து; அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; இன்னும், நீங்கள் நரக நெருப்புக் குழியின் விளிம்பின் மீது இருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான்-  நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான்.” –அல் குர்ஆன்.3:103.

உலகில் உள்ள எல்லா ஜமாஅத் தலைவர்களும்,இயக்க ஆலிம்களும், மார்க்க அறிஞர்களும் மேற்க்கண்ட வசனத்தை கூறி முஸ்லிம்களே ஒன்றுபடுங்கள் என்று கூவிக் கூவி அழைத்து களைத்து விட்டனர். ஆனாலும் பிரிவுகளும் பிரிவினையும் பெருகிக்கொண்டே போகிறது. ஏன் இந்த இயக்க, ஜமாஅத் தலைவர்களால் முஸ்லிம்களை ஓரணியில் ஒன்றுபடுத்த முடியவில்லை? என்று சிந்திக்கும்போது ஒரு உண்மை புலப்படுகிறது. அல்லாஹ்வும்,அல்லாஹ்வின் தூதரும் வழி காட்டிய  இஸ்லாத்திற்கு, இவர்கள் மக்களை அழைக்கவில்லை. மனோ இச்சையால் உருவாக்கிய தங்கள் இயக்கத்தை, ஜமாஅத்தை வலுப்படுத்தவே அழைக்கின்றனர்.

அவர்களுக்கு (மார்க்க விசயத்தில்) தெளிவான கட்டளைகளையும் கொடுத்தோம்; எனினும் அவர்களுக்கிடையே உண்டான பொறாமையினால், அவர்களுக்கு (வேத) ஞானம் வந்த பின்னரும் அவர்கள் அபிப்ராயபேதம் கொண்டனர்;…. –அல் குர்ஆன்.45:17.

அவர்கள்,தங்களிடம் (வேத) ஞானம் வந்த பின்னர், தங்களுக்கிடையுள்ள பொறாமையின் காரணமாகவேயன்றி அவர்கள் பிரிந்து போகவில்லை.-அல் குர்ஆன்.42:14.

இப்படி ஒன்றுபட்ட ஒரே சமூதாயத்தில் பிரிவுகள் பிளவுகள் ஏன் வந்தது என்று எண்ணிப்பார்க்கும்போது குர்ஆன் கூறும் உண்மை புரிகிறது. முஸ்லிம்கள் தங்களுக்குள் ஏற்ப்பட்ட பொறாமையின் காரணமாகவே பிரிந்து நிற்கின்றனர். தாங்கள்தாம் நேர்வழியில் இருக்கிறோம் என்பதை காட்டுவதற்காக; தங்கள் ஜமாஅத், இயக்கம்,சாராத சக சகோதர முஸ்லிம்களை, பித்அத்திகள், முனாபீக்கள், காபிர்கள், முஷ்ரிக்குகள் என்ற பத்வாக்களால் பிளவு படுத்துகின்றனர். பிறகு கூச்சநாச்சமின்றி தங்கள் இயக்கத்தில் சேர அழைக்கின்றனர்.

அல்லாஹ்வின் வேதமான குர்ஆன் அனைத்து முஸ்லிம்களுக்கும் தெளிவான வழி காட்டியாக உள்ளது. அதில் கூட்டல் குறைத்தல் செய்யமுடியாத அளவிற்கு அல்லாஹ்வால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதில் எவரும் கை வரிசை காட்ட முடியாது.நபி (ஸல்) அவர்களின் சொல் செயல் அங்கீகாரம் தரம் பிரிக்கப்பட்டு ஹதீஸ்கள் வகைபடுத்தி முடிக்கப்பட்டு ஆயிரம் வருடங்களுக்குமேல் ஆகிவிட்டது. புதிதாக எதையும் எவரும் சேர்க்கமுடியாது.

முஸ்லிம்களை பல தெய்வங்களை வணங்கச்சொல்லி நரகத்தில் தள்ளலாம் என்ற நம்பிக்கையை ஷைத்தான் இழந்து விட்டான். ஆனாலும் அல்லாஹ்விடம் போட்ட சபதத்தை நிறைவேற்ற அவன் கையாளும் உபாயமே,

குர் ஆனுக்கும்,ஹதீஸுக்கும் புதிய புதிய அர்த்தங்களைக் கொடுத்து அதன் அடிப்படையில் புதுப் புது இயக்க ஜமாஅத்களை, அரசியல் லாபத்திற்காக உருவாக்கி ஒன்றுபட்ட உம்மத்தை உடைத்து நரகில் தள்ளும் உபாயம். இதையே நபி(ஸல்) அவர்கள் அன்றே எச்சரித்தார்கள். நபித்தோழர்களும் இந்நிலையை விளங்கியே இருந்தனர்.ஆனால் கை சேதம்! இன்றைய இளைஞர்கள் இந்த இயக்க முஸீபத்துகளின் தீமையை அறியாமல் விளக்கில் விழும் விட்டில் பூச்சிகளாக உள்ளனர். ஒரு ஹதீஸைப் பார்ப்போம்.

அப்துல்லாஹ் இப்ன் ஸுபைர் (ரலி) (மக்காவினுள் ஹஜ்ஜாஜ் இப்னு யூசுப்பால் முற்றுகையிடப்பட்ட யுத்த) குழப்ப வருடத்தில் இப்ன் உமர்(ரலி) அவர்களிடம் இரண்டு மனிதர்கள் வந்து, “ மக்கள் (அரசியல் காரணங்களுக்காகத் தங்களிடையே பிளவு பட்டு) அலைக்கழிக்கப்படுகிறார்கள். தாங்கள் உமர் (ரலி) அவர்களின் புதல்வரும் நபி (ஸல்) அவர்களின் தோழரும் ஆவீர்கள். (நியாயத்திற்காக போராட) தாங்கள் புறப்படுவதற்கு எது தடையாக உள்ளது?” என்று கேட்டனர்.

அதற்க்கு இப்ன் உமர் (ரலி) “ என் சகோதரனின் இரத்தத்தைச் சிந்துவதற்கு அல்லாஹ் தடை விதித்திருப்பதே என்னை தடுக்கிறது” என்று கூறினார்கள்.அதற்கு அவர்களிருவரும் “குழப்பம் நீங்கி மார்க்கம் (முழுவதும்) அல்லாஹ்வுக்கு உரித்தானதாகும் வரை அவர்களுடன் நீங்கள் போரிடுங்கள்.” என்று அல்லாஹ் இவ்வசனத்தில் (அல் குர்ஆன்.2:193.) கூறவில்லையா?” என்று கேட்டார்கள். அதற்க்கு இப்ன் உமர் (ரலி) அவர்கள்,

“(ஆம்! இறைத்தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில்) குழப்பம் நீங்கும் வரை (பகைவர்களுடன்) நாங்கள் போராடினோம். மார்க்கம் (முழுவதும்) அல்லாஹ்வுக்கு உரித்தானதாக ஆனது. ஆனால் (இப்போது) நீங்களோ (அரசியல் காரணங்களுக்காகப்) போராடி குழப்பம் உருவாகுவதையும், மார்க்கம் அல்லாஹ் அல்லாதோருக்கு உரித்தானதாக ஆவதையுமே விரும்புகிறீர்கள்!” என்றார்கள்.
அறிவிப்பாளர்: நாபிஉ (ரஹ்). நூல்: புஹாரி.4513.

இன்று பல்வேறு இயக்கங்கள், ஜமாஅத்கள் அரசியல் காரணங்களுக்காக தங்கள் இயக்கத்தில் சேரச் சொல்லி முஸ்லிம்களை அழைக்கின்றனர். தாங்களே நேர்வழியில் இருப்பதாக சொல்லிக் கொண்டு தனித் தனி பெயர்களில் செயல்பட்டு, முஸ்லிம்களின் ஒட்டுமொத்த பலத்தை பிளவுபடுத்தி அல்லாஹ் அல்லாத மாற்றார்கள் கையில் மார்க்கம் உரித்தானதாக ஆவதையே விரும்புகிறார்கள். தங்களை, நான்கு சுன்னத்மத்ஹபு, ஸலபுகள், முஜாஹித், தவ்ஹீத்வாதிகள் என்ற கவர்ச்சி லேபிளை ஒட்டியும்,மாநில செயலாளர், மாவட்ட தலைவர், செயலாளர். என்று பதவி தூண்டில் போட்டு இளைஞர்களை இழுக்கின்றனர்.

அறியாமையின் காரணமாகவோ அல்லது மூட முல்லாக்களின் துர்போதனையின் காரணமாகவோ முஸ்லிம் கூட்டத்தினர் பகிரங்கமாக இணைவைக்கும் காரியத்தைச் செய்தாலும், அவர்களின் தவறை சுற்றிக்காட்டி நல்லுபதேசம் செய்ய வேண்டுமே தவிர, முஸ்லிம்களுக்கிடையில் பிரிவினை ஏற்படுத்துவதோ, அல்லது அக்கூட்டத்தை விட்டுப் பிரிந்து தனிக்கூட்டம் ஏற்ப்படுத்துவதோ மார்க்கம் அனுமதிக்கவில்லை என்பதை மூஸா (அலை),ஹாரூன் (அலை) உரையாடல் மூலம் அறியலாம்.

“ ஹாரூனே! (காளைக்கன்றை வணங்கி) இவர்கள் வழி கெடுக்கிறார்கள் என்று நீங்கள் கண்டபோது உங்களை தடை செய்தது யாது?” என்று கேட்டார்.”நீங்கள் என்னை பின் பற்றியிருக்க வேண்டாமா? நீங்கள் என் கட்டளையை மீறினீர்களா?”

(இதற்க்கு ஹாரூன் (அலை) “ என் தாயின் மகனே! என் தாடியையோ, தலை (முடி)யையோ பிடித்திழுக்காதீர்கள்; “ பனீ இஸ்ராயீலிடையே நீங்கள் பிரிவினையை உண்டாக்கி விட்டீர்கள்; என் வார்த்தைக்காக நீங்கள் காத்திருக்கவில்லை” என்று நீர் கூறுவீரோ என நிச்சயமாக நான் அஞ்சினேன்” என்று கூறினார்.” -அல் குர்ஆன்.20:94-95.

இன்றைய தவ்ஹீது பேசும் இயக்க ஆலிம்கள், சமூதாய பிரிவினை என்னும் கொடிய குற்றத்தை செய்து மக்களை வழி கெடுக்கிறார்கள். ஒரு மனிதன் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வது அல்லாஹ்வின் நாட்டத்தின்பால் உள்ள விஷயம்.ஹிதாயத் என்னும் நேர்வழி அல்லாஹ் நாடியவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். வேறு எவருக்கும் இதில் பங்கில்லை.இப்படி அல்லாஹ்வின் நாட்டத்தினால் உருவாக்கப்பட்ட ஒரு முஸ்லிம் சமூதாயத்தை,ஏதாவது ஒரு காரணம் சொல்லி பிரிவினை செய்பவர்களுக்கு கடும் வேதனை காத்திருக்கிறது.

“நிச்சயமாக உங்கள் “உம்மத்து” சமுதாயம்(வேற்றுமை ஏதுமில்லா) ஒரே சமுதாயம்தான்.” (அல் குர்ஆன்.21:92,23:52) என்று அல்லாஹ் சொல்லிக்காட்டுகிறான்.அல்லாஹ்வின் கட்டளைக்கு எதிராக ஒன்று பட்ட உம்மத்தை உடைத்து தனித்தனி ஜமாஅத் ஏற்படுத்தும் இயக்க வாதிகள் ஷைத்தானின் தோழர்களே என்பதில் சந்தேகம் இல்லை. ஒரு நபியாகவே இருந்தாலும் சமூதாயத்தை விட்டு விலகுதல் தண்டனைக்குரிய குற்றம் என்பதை யூனுஸ் (அலை) அவர்கள் மீனின் வயிற்றில் வைக்கப்பட்ட சம்பவத்திலிருந்து அறியலாம்.

“இன்னும் துன்னூன் (யூனுஸ் தம் சமூகத்தாரை விட்டும்) கோபமாக வெளியேறிய போது, பாவிகள் சமூகத்தை விட்டும் வெளியேறி விட்டபடியால்) அவரை நாம் நெருக்கடியில் ஆக்க மாட்டோம் என்று எண்ணிக்கொண்டார்; எனவே அவர் (மீன் வயிற்றின்) ஆழ்ந்த இருளிலிருந்து “உன்னைத்தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை; நீ மிகவும் தூய்மையானவன்; நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்.’ என்று பிரார்த்தித்தார்.  -அல் குர்ஆன்.21:87.

ஒன்றுபட்ட உம்மத்திற்கு “ஜமாத்துல் முஸ்லிமீன்” என்று நபி (ஸல்) அவர்கள் வைத்த பெயர் மறக்கப்பட்டு, இன்று சுன்னத் வல் ஜமாஅத் என்று அழைக்கப்பட என்ன காரணம்? பிரிவினைதான்.

அப்துல்லாஹ் இப்னு ஸபா எனும் முஸ்லிம் பெயர் தாங்கிய யூதனின் சூழ்ச்சியினால், கவாரிஜிகள் என்ற கூட்டம் உருவாகி அலி (ரலி) அவர்களை ஆதரிப்பது போல நடித்து தனி ஜமாஅத், தனிப்பள்ளி, கட்டினர். மற்ற முஸ்லிம்கள், நபித்தோழர்கள், முதல் மூன்று கலிபாக்கள் அனைவரும் காபிர்கள் என்றும், தாங்களே அசல் தவ்ஹீதுவாதிகள் என்றும் அறிவித்துக்கொண்டனர்.

ஒரே உம்மத்திலிருந்து இவர்கள் பிரிந்து தனிக் கட்சி ஆரம்பித்ததால், இவர்களை பிரிந்துபோனவர்கள் -ஷியா என்று அழைக்கப்பட்டனர். இவர்களிடமிருந்து தங்களை வேறுபடுத்திக்காட்ட வைத்துக்கொண்ட பெயர்தான் “சுன்னத் வல் ஜமாஅத்.’ இதுவே ஸுன்னி-ஷியா என்ற இரு பிரிவாக சொல்லப்படுகிறது. இந்த சுன்னத் வல் ஜமாத்தை மேலும் பிளவு படுத்தி உடைத்து கூறும் போடும் வேலையை தவ்ஹீது இயக்க ஆலிம்கள் (நவீன கவாரிஜிகள்) நன்றாகவே செய்து வருகிறார்கள். தவ்ஹீது பெயரைச் சொல்லி சஹாபா பெருமக்களை காபிராக்கி, தனி இமாம்,தனிப்பள்ளி, தனிக்கொடி கண்ட கவாரிஜிகள் வழியிலேயே இன்று தமிழக தவ்ஹீது ஆலிம்கள் செல்கின்றனர்.

இன்றைய JAQH-TNTJ-INTJ போன்ற தவ்ஹீது லேபிள் இயக்கங்களின் செயல்பாடுகளுக்கு குர்ஆன்.ஹதீஸ்களில் ஆதாரம் பார்க்க முடியாது. கவாரீஜ் எனும் காரிஜியாக்களிடம் மட்டுமே காணக்கிடைக்கும் குர்ஆனுக்கு மனோ இச்சைப்படி விளக்கம் கொடுத்து, ஸஹீகான ஹதீஸ்களை நிராகரித்தவர்கள் காரிஜியாக்கள். இவர்கள் வழியிலே இயக்க ஆலிம் அண்ணன் செல்கிறார்.ஆலிம் அண்ணனை வளர்த்தெடுத்து உருவாக்கிய JAQH-INTJ பங்காளிகளுக்கும் அல்லாஹ் நிரப்பமான கூலியை கொடுப்பான் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

அன்புச் சகோதரர்களே! மரணத்திற்குபின் கப்ரில் மலக்குகள், நீ சுன்னத்தா அல்லது தவ்ஹீதா? என்று நிச்சயம் கேட்கப்போவதில்லை.இன்று மண்ணுக்குமேல் மேல் அடிக்கும் தம்பட்ட தவ்ஹீது முழக்கம் மண்ணுக்கு கீழே கேட்கப்பட மாட்டாது. ஏனெனில் ஏகத்துவ கலிமா சொன்னவன் தான் முஸ்லிம் என்று மலக்குமார்களுக்கு நன்கு தெரியும். அதனால்தான் எல்லாம் வல்ல அல்லாஹ் “தவ்ஹீதாகவேயன்றி….”என்று சொல்லாமல் “முஸ்லீமாகவேயன்றி மரணித்து விடாதீர்கள்”. (குர்ஆன்.2:132,3:102) என்று கூறுகிறான்.

நபி (ஸல்) அவர்கள் ஏற்ப்படுத்தி விட்டுச் சென்ற “ஜமாத்துல் முஸ்லிமீன்” என்ற அகில உலக பேரியக்கம் இன்றும் உள்ளது. கியாம நாள் வரை அது இருக்கும்.இந்த இயக்கம் இருப்பதால்தான் உலக முழுவதிலும் உள்ள பள்ளிகளில் அதான் அழைப்பை ஏற்று முஸ்லிம்கள் தொழச் செல்லுகின்றனர். ரமழானில் நோன்பு வைக்கின்றனர். ஜக்காத் கொடுக்க வசதி உள்ளவர்கள் கொடுக்கிறார்கள். ஹஜ் செய்கின்றனர்.முஸ்லிம்கள் உலகில் எங்கு சென்றாலும் அவர்களை ஒற்றுமைப்படுத்துவது இப்பேரியக்கத்தின் ஐந்து கடமைகளே!

அன்புச் சகோதரர்களே! அல்லாஹ் நமக்கு இட்ட முஸ்லிம் என்ற பெயரிலேயே ஒற்றுமையாக குர்ஆன், ஹதீஸை பற்றிப்பிடித்து அப்பேரியக்கத்திலேயே இருப்போம். புதிது புதிதாக உருவாகும் ஷைத்தானிய இயக்க, ஜமா அத்துக்களை புறக்கணிப்போம். ஷைத்தானின் ஆசை வார்த்தைக்கு மயங்கி வெவ்வேறு தனிப்பெயரில் இயக்கம் கண்டு நரகம் புகும் 72 கூட்டத்தை விட்டும் விலகி, அன்று நபித்தோழர்கள் எவ்வாறு வாழ்ந்தார்களோ அவ்வாறு வாழ்ந்து, அவர்கள் வெற்றி பெற்ற அந்த ஒரு கூட்டத்திலே நாமும் இருப்பதற்கு அல்லாஹ் அருள் செய்வானாக!

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages