கண்ணிமைக்கும் நேரத்தில் இலட்சக்கணக்கான உயிர்களை காவு கொண்ட சுனாமி! - Deen or Dunia

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, December 21, 2015

கண்ணிமைக்கும் நேரத்தில் இலட்சக்கணக்கான உயிர்களை காவு கொண்ட சுனாமி!

கண்ணிமைக்கும் நேரத்தில் இலட்சக்கணக்கான உயிர்களை காவு கொண்ட சுனாமி!பூத்திருந்த இந்து சமுத்திரம் காலைக் கதிரவனின் வரவை வழமை போல் வரவேற்கக் காத்திருந்த நேரம் மகா சமுத்திரத்தின் ஆழியில் ஏற்பட்ட பிறழ்வுகள் பூகம்பமாகி இந்தோனேசியாவின் சுமாத்திரா மேற்குப் பிரதேசத்திலிருந்து சுமார் ஆறு (06) மீற்றர் உயரம் கொண்ட இராட்சத பேரலையாக உருவெடுத்தது.

2004 டிசம்பர் 26ம் திகதி வரை சுனாமி என்றால் என்னவென்று தெரியாத மக்களுக்கு அது இயற்கையின் பேரழிவு என்ற செய்தியுடன் நாடுகள் பலவற்றின் கரையோரப் பிரதேசங்களைத் துடைத்தெறிந்தது. ஜப்பானியருக்குப் பரிச்சயமான சுனாமி என்ற சொல் அந்நாட்டு மொழியிலேயே பெயரெடுத்துள்ளது.

சுமத்திராவில் சரியாக 6.58 நிமிடத்தில் ஏற்பட்ட சுனாமி இலங்கை நேரப்படி காலை 9.25க்கு தனது வீச்சை வெளிக்காட்டியது. சுமார் 1600 கிலோ மீற்றர் தூரத்தை 2 மணி நேரத்தில் பயணித்துள்ளது.

சுனாமிப் பேரலைத் தாக்கத்தினால் இந்தோனேசியா, இந்தியா, இலங்கை, தாய்லாந்து, மாலைதீவு, சோமாலியா உட்பட மொத்தம் 14 நாடுகள் தமது நாட்டு உயிர்களையும், பொருளாதாரத்தையும் இழந்து அவல நிலைக்குள்ளாகின.

9.1 ரிச்டர் அளவுடைய (Magnitude) பேரலை அனர்த்தம் காரணமாக 230,000 தொடக்கம் 280,000 மக்கள் தமது இன்னுயிரை இழந்து தத்தமது குடும்பங்களை மீளாத் துயரில் விட்டுச் சென்றுள்ளனர். 2.5 மில்லியன் மக்களை இடம்பெயர வைத்து அகதி என்ற அந்தஸ்தையும் கொடுத்து பிறரின் உதவியை எதிர்பார்க்கும் மக்கள் தொகுதி ஒன்றையும் உருவாக்கியது.

கடற்கரைப் பிரதேசங்களை அண்மித்த குடாக்களில் மிக அமைதியாக அலையின்றி இருக்கும் கடல் நீரானது சுனாமிப் பேரலையின் தாக்கத்தினால் சுமார் 5 கிலோ மீற்றர் நிலப்பரப்புக்குக் குறையாத அளவு ஆர்ப்பரித்துக் கொண்டமையும் கற்பனைக்கு எட்டாதவைகளாக இருந்த போதும் கண்கூடாகக் கண்ட காட்சிகள் தான்.

ஆடிக்காற்றில் அம்மி பறக்கும் அரச இலை தாழும் என்று கதைகள் மூலம் கேள்விப்பட்டு என்ன கதை இது என்று மற்றவரிடம் கூறும் நமக்கு நமது கண்ணெதிரிலே பாரிய ரயில் வண்டிகளும், கனரக ஊர்திகளும், ஏனைய வாகனங்களும், கட்டிட இடிபாடுகளும், இவைகளோடு இழந்தால் என்றுமே மீளப் பெற முடியாத பெறுமதியற்ற உயிர்களும் பருமட்டமாக நீரில் அடித்துச் செல்லப்பட்ட காட்சிகள் யாரின் இதயங்களைத்தான் கசக்கிப் பிழியாமல் விட்டிருக்கும்.

பேரழிவை ஏற்படுத்திய சுனாமியினால் உலகில் உள்ள மிக முக்கியமான சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்டதுடன் நாடுகள் பேணிப்பாதுகாத்த சுற்றுலா மையங்களும் நாசமடைந்தன. மேலும் உலகின் மீன்பிடித் துறைமுகங்கள் அழிக்கப்பட்டதுடன் உலக மீன் நுகர்ச்சியும், மீன்பிடித்தொழிலும் அதன் மூலம் எட்டப்பட்ட வருமானமும் இல்லாதொழிந்ததுடன் பெருமளவு ஐஸ் தொழிற்சாலைகளும் தடம்புரண்டழிந்து போயின.

சுனாமி பாதிப்புக்கள் தொடர்பாக எமது நாட்டை எடுத்துக் கொண்டால் சுனாமியின் தாக்கம் முதலில் காலி பிரதேசத்தையும், பேருவளையையும் தாக்கிய சில விநாடிகளின் பின்னரே வட, கிழக்கு உட்பட நாட்டின் ஏனைய பிரதேசங்கள் அழிவுக்குள்ளாகின என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளன.

பொருளாதார ரீதியில் காலூன்றிக் கொண்ட அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் என்ற வரையறைக்குள் தன்னைப் பெருமைப்படுத்திக் கொண்டிருந்த எமது நாடு இந்த பேரனத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட நாடுகள் என்ற வகையில் இரண்டாம் நிலையில் உள்ளது. மெஸ்புறோ MESPRO என்ற தன்னார்வ நிறுவனம் மேற்கொண்ட ஆய்வுகளின்படி அதன் பணிப்பாளர் டாக்டர் கே.எல்.நக்பர் அவர்களின் குறிப்பொன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளபடி இந்த பேரனத்தம் சுமார் நாற்பதாயிரம் மக்களின் உயிர்களைக் காவு கொண்டதாகவும் இத் தொகை சற்று அதிகரிக்கவும் கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதேவேளை 2005 மார்ச் மாதம் 1ஆம் திகதி சுனாமி அனர்த்தம் தொடர்பாக எடுக்கப்பட்ட கணக்கறிக்கையின்படி 36,603 பேர் மரணமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் எட்டு இலட்சம் பேர் (800,000) நேரடியாகப் பாதிக்கப்பட்டதுடன் 90,000 தொண்ணூறாயிரம் கட்டிடங்கள் இடிபாடடைந்து போயுள்ளன.

இலங்கையின் கரையோர மாவட்டங்கள் 12ல் அதிக உயிர்கள் காவு கொள்ளப்பட்ட மாவட்டமாக அம்பாறை மாவட்டம் திகழ்கின்றது. இம்மாவட்டத்தில் மொத்தம் 10,436 பேர் மரணத்தைத் தழுவியுள்ளனர். கல்முனை பிரதேச செயலாளர் பிரிவில் மட்டும் 4960 இன்னுயிரை ஈந்தவர்கள்.

குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பொறுத்த மட்டில் முல்லைத்தீவில் 3000 பேரும், யாழ்ப்பாணத்தில் 2640 பேரும், மட்டக்களப்பில் 2794 பேரும், திருமலையில் 1077 பேரும், கிளிநொச்சியில் 560 பேருமாக மொத்தம் 20,507 பேர் சுனாமிப் பேரலையின் கோரப்பிடிக்கு தம் உயிரைத் தாரைவார்த்தவர்கள்.

மனித உயிர்களையும், பொருளாதாரத்தையும், உளவியல் ரீதியான தாக்கங்களையும், வறிய மக்களின் வாழ்வாதாரத்தையும் தட்டிப்பறித்துச் சென்று விட்டது என்ற கூற்றின் கசிவுத் தன்மை மனித சமூகம் சுமார் 14 பில்லியன் அமெரிக்க டொலர்களை வாழ்வாதார மீட்சிப்பணிகளுக்காக வழங்கியது.

இதுதவிர வடக்கு, கிழக்கில் 4190 பேர் காணாமற் போயுள்ளதுடன் 1743 பேர் காயங்களுக்கும் ஆளாகினர். 102,879 குடும்பங்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டதுடன் 57400 வீடுகள் முழுமையாகவும், 186,718 வீடுகள் பகுதியடிப்படையிலும் சேதமடைந்தன. நாடு பூராகவும் 21,441 பேர் காயங்களுக்கு உள்ளானதுடன் 516,150 பேர் இடம்பெயர்ந்தனர். சுனாமியினால் சுமார் 40,000 பேர் அனாதைகளாகவும், விதவைகளாகவும் ஆக்கப்பட்டனர்.

இலங்கையில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தம் தொடர்பாக உலக வங்கி மேற்கொண்ட ஆய்வின்படி 150,000 தொழில்களை இழந்துள்ளனர். இதில் மீனவர்கள் 75% பேர் என MESPRO அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது தவிர 10 மீன்பிடி துறைமுகங்களும், ஐஸ்கட்டி உற்பத்தி செய்யும் நிலையங்கள் 18ம் முற்றாகச் சேதமடைந்துள்ளன.

இலங்கையின் கரையோரப் பிரதேச மக்களின் ஜீவனோபாயத் தொழில் முயற்சிகளிலும், அந்நியச் செலாவணி மீட்டலிலும் முக்கிய இடத்தை வகிப்பது உல்லாசப் பணயத் துறையாகும். இத்துறையைப் பொறுத்தமட்டில் நட்சத்திர ஹோட்டல்கள் 53ம், சிறிய ஹோட்டல்கள் 248ம், உணவு விடுதிகள் 210ம் என சேதத்துக்குள்ளானவைகளாகும்.

கரையோரப் பிரதேச தோப்புகள் கொண்ட இடங்களிலிலருந்த தும்புத் தொழிற்சாலை, நெசவுத் தொழில், பிரதேச ரீதியாகப் பிரபல்யம் பெற்று விளங்கும் கைப்பணிப் பொருட்கள் அதன் மூலப் பொருட்கள் என்பவற்றுக்கும் ஏற்பட்ட சேதம் சில இடங்களில் உள்ள மக்களை யாசிக்கும் நிலைக்கும் தள்ளியதெனலாம்.

சுனாமி தாக்கம் காரணமாக எமது நாட்டுக்கு ஏற்பட்ட மற்றுமொரு பாரிய நஷ்டம் கரையோர ரயில் போக்குவரத்துத் துறைக்கு ஏற்பட்ட பாதிப்பாகும். இதன்போது 69 புகையிரத நிலையங்கள் பாதிப்புற்றதுடன் பிரதான புகையிரதப் பாதைகள் 1615 கிலோ மீற்றர் சேதமடைந்தன. இதன் மூலம் ரயில்வே திணைக்களத்துக்கு ஏற்பட்ட நஷ்டம் 70620 மில்லியனாகும். (MESPRO REPORT) அத்துடன் 25 பாலங்கள் உடைந்து சேதமடைந்தன. மின்சாரக் கட்டமைப்பும் சீர்குலைந்து போயின.

கல்வித்துறையைப் பொறுத்தமட்டில் 182 பாடசாலைகள் சேதமடைந்ததுடன் 441 பாடசாலைகளில் அகதிகள் தஞ்சமடைந்திருந்த நிலைமையும் ஏற்பட்டது மேலும் சுனாமியின் தாக்கம் காரணமாக சில பல்கலைக்கழகங்கள் தொழில்நுட்பக் கல்லூரிகளும் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

பொதுப் போக்குவரத்தைப் பொறுத்தமட்டில் பெருந்தொகை

யாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரச, தனியாருக்குச் சொந்தமான பேருந்துகள், வான்கள் மோட்டார் வண்டிகள், அதன் சார்பு வகைகள், தரிப்பு நிலையங்கள், பேருந்து நிலையங்கள் என்பனவும் சின்னாபின்னமாக வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன.

முழு உலகையுமே திரும்பிப்பார்க்கவைத்த சுனாமியினால் இந்தியாவின் தென்னிந்திய மாநிலமான தமிழ்நாடு, கேரளாவும், இலங்கை, மாலைதீவு, சோமாலியா போன்ற நாடுகள் மிகவும் வறுமைப்பட்ட அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் வரிசையில் தம்பாதங்களை ஏட்டி வைக்க முற்பட்ட வேளை எவருமே எதிர்பார்த்திராத பேரனத்தம் மேற்சொன்ன நாடுகளின் பொருளாதாரக் கட்டமைப்பை சீர்குலைத்தமையானது அந்நாடுகளின் அபிவிருத்தி முன்னேற்றப்பாதையில் ஆகக் குறைந்தது ஐந்து வருடங்களையாவது பின்னோக்கி நகர்த்தியதெனலாம்.

பொருளாதார, வாழ்வாதார, வளங்களின் அழிவுக்கான மாற்றீடுகளை காலப்போக்கில் நாடுகள் ஏற்படுத்திக்கொண்டாலும், எவ்வித பெறுமான அலகுகளாலும் அளவீடு செய்ய முடியாத இலட்சக்கணக்கான உயிர்களைப் பறிகொடுத்த உறவுகளின் உள்ளங்களை ஆற்றுப்படுத்தும் நடவடிக்கைகளில் உலகம் எவ்வளவு தூரம் வெற்றி கொண்டதென்பது விவாதத்துக்குரியதாகும்.

அழிவுக்குள்ளான நாடுகளில் டிசம்பர் 26ஆம் திகதியும் அதன் முன் – பின் திகதிகளும் மனித உள்ளங்களை கடந்த கால இழப்புக்களாக தடம்புரளச் செய்யும் நிலை நாம் வாழும் சமகாலத் தலைமுறை வரை நீடிக்கும் என்பதில் ஐயமில்லை.

இலங்கையைப் பொறுத்தமட்டில் சுனாமி ஏற்பட்ட கால சூழல் பயங்கரவாத நடவடிக்கைகளினால் வடக்கு, கிழக்கு சோபை இழந்த நிலையுடன் முழு நாடுமே அச்சத்தால் உறங்கியிருந்த காலம். சுனாமியின் தாக்கம் ஏனைய நாடுகளைப் பொறுத்தமட்டில் ஒருதலைப்பட்சமாக இருந்த போதிலும் இலங்கையில் மாத்திரம் மரத்தால் விழுந்தவனை மாடு ஏறி மிதித்த கதையாக மாறியதெனலாம்.

இவ்விரு நிலைமைகள் எமது நாட்டை ஆட்கொண்டபோது, சுனாமியினால் மனித மனங்களில் பாரிய மாற்றம் ஏற்பட்டு சமூகங்களுக்கிடையே பிணைப்புகளும் உருவாகின. அன்றைய நிலையில் சமூகக் காரணிகளினால் இனங்களுக்கிடையே காணப்பட்ட அசௌகரிய மனப்பாங்கு மாற்றம் பெற்று தமிழ், முஸ்லிம் சிங்களவர், கிறிஸ்தவர் என்ற வேறுபாடின்றி ஒருவருக்கொருவர் உதவும் மனப்பாங்கை வளர்த்துக்கொள்வதற்கும் இயற்கையின் சீற்றத்தையும், இறைவனின் ஏற்பாடுகளின் காரியங்களையும் கண்ட மக்களின் உள்ளங்கள் இறையச்ச உணர்வுகளுக்கு முழுவதுமாக தம்மை இயல்பாக்கிக் கொண்டன.

குறிப்பாக அண்மையில் தமிழ் நாட்டில் சென்னை உட்பட ஏனைய நகரங்களில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது பள்ளிவாசல்கள், கோயில்கள், தேவாலயங்கள், மற்றும் சமய நிறுவனங்களில் சாதி, மத வேறுபாடின்றி எல்லா மக்களும் மனித குலம் என்ற அடிப்படையில் மனித உணர்வுகள் மேலோங்கி நின்றதைக் குறிப்பிடலாம்.

சுனாமியின் தாக்க விளைவுகளை சீர்செய்வதில் அரசாங்கமும், உள்ளூர் மற்றும் சர்வதேச தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் பாரியளவில் தமது பங்களிப்புக்களைச் செய்த போதும் மீள் கட்டுமான, வாழ்வாதார மறுமலர்ச்சி என்பன முழுமையாக ஏற்பட்டனவா என்ற கேள்விக்கு பூரணமான பதிலளிக்க முடியாத நிலைமையே நேரடி அவதானிப்பாளர்கள் மூலம் அறிய முடிகின்றது.

எப்படித்தான் எமது உள்ளங்கள் பண்பட்ட போதிலும், இலவசங்கள் கிடைக்கும் போது உரியவர்கள், தகுதியானவர்களுக்கு முன்னர் ஓடிச் சென்று அவற்றைப் பெற்றுக் கொள்ள முண்டியடிக்கும் மனநிலை கொண்ட மனிதர்களால் பாதிக்கப்பட்டவர்கள், பரிதாபத்துக்குரியவர்கள் சாதித்துக்கொள்வதற்குத் திராணியற்றவர்கள் ஏமாளியாகிவிடுகின்றனர்.

நிவாரணம் வழங்கல், நஷ்ட ஈட்டுக் கொடுப்பனவுகள் எனும் போது வழங்குபவர்கள், அதிகாரிகள், பெறுபவர்களுக்கிடையே நிலவிய உறவுகள் உண்மையாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கிடைக்காமல் போயின.

மீள் கட்டுமானப் பணிகளின் போது, குறிப்பாக பாதிப்புக்குள்ளான முக்கிய பாடசாலைகள் ஏனோ தானோ என்ற நிலையில் திருத்தி அமைக்கப்பட போதியளவு மாணவர்களே இல்லாத இடங்களில் பெருவாரியான கட்டிடத் தொகுதிகள் நிர்மாணிக்கப்பட்டமை சமன்பாட்டுத் தன்மைக்கு ஏற்றதாக அமையவில்லை.

மீள்குடியேற்றம் தொடர்பாக கவனத்தைச் செலுத்தும்போது, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பாதிப்புக்குள்ளானவர்கள் திருப்தி அடைந்தனரா என்ற வினா உள்ளது.

குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சவூதி அரசாங்கத்தின் நிதி உதவியினால் நுரைச்சோலை என்ற இடத்தில் தலா 27 இலட்சம் ரூபா பெறுமதியில் நிர்மாணிக்கப்பட்ட 500 வீடுகள் இன்றுவரை பாழடைந்து கிடப்பதுடன் அங்கு நிர்மாணிக்கப்பட்ட சமூக நிலையங்களும் சேதமடைந்துள்ளன. இந்த வீடமைப்புத் திட்டத்தை உருவாக்குவதிலும் செயற்படுத்தியதிலும் முக்கிய பங்காற்றியவர் முன்னாள் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் பேரியல் அஷ்ரஃபாகும். பல்வேறுபட்ட காழ்ப்புணர்ச்சிகள் காரணமாக புட்டம்பை போன்ற இடங்களிலிருந்து அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் குடியேறிய சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் அகதிகளாகவும், உறவினர் வீடுகளிலுமே தங்கி இருக்கின்றனர்.

சுனாமியால் பாதிக்கப்பட்டு ஏதோ ஒரு வகையில் மன உளைச்சலுக்கு ஆளான மக்கள் வருடா வருடம் டிசம்பர் 26ல் அரச நிறுவனங்களுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருவதை இதுவரை காணக்கூடியதாக இருக்கின்றது.

எனவே, சுனாமியால் நஷ்டமடைந்தவர்கள் இன்னும் தமது இருப்பைத் தக்கவைத்துக்கொள்ளாமல் இருப்பார்களேயானால் அவர்களின் பிரச்சினைகள் அடையாளங்காணப்பட்டுத் தீர்த்து வைக்கப்படுவது அரசுசார் நிறுவனங்களின் ஆரோக்கிய நடவடிக்கையாகவும், தார்மீகக் கடமையுமாகும்.

ஏற்கனவே குறிப்பிட்டது போன்று எம்மைப் போன்று சுனாமியால் பாதிக்கப்பட்ட நாடுகளைச் சார்ந்தவர்களுக்கு சுனாமி புதிதாக அல்லது புதிய பேரழிவுக்காரணியாக இருந்தாலும் ஜப்பானிய துறைமுக பிரதேச மக்கள் குறைந்தளவு ரிச்டர் அளவு பூகம்பத்தையும் அதனோடு கூடிய சுனாமியையும் கடந்த காலங்களில் கண்டிருக்கின்றனர்.

கலாபூஷணம் மீரா எஸ்.இஸ்ஸடீன்

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages